சார்புநிலை தோற்றம் - Depending Orientation

படிச்ச சமுப்பாதம் என்பதற்குச் சார்ந்து நின்று, ஒரே சமயத்தில் உண்டாவது என்பது பொருள். படிச்ச சமுப்பதாம் பிறப்பு இறப்பைப்(ஸம்ஸாரத்தை) பற்றிக் கூறும் விஷயம் என்பதையும், ஆதி சடப் பொருள்களில் இருந்து உலகம் உருப்பட்டதைக் கூறுவது அன்று என்பதையும் நினைவில் பதியவைக்க வேண்டும். படிச்ச சமுப்பாதம் துக்கத்தினுடைய காரணத்தைக் கூறுகிறது. பிறப்பினுடைய மூலகாரணத்தைக் கூறுவது அன்று.

அவிஜ்ஜை(அறியாமை) என்பது பிறவிச் சக்கரத்தின் காரணம்(அல்லது தொடர்பு) ஆகும். இது நற்காட்சியை( Right Understanding ) மறைக்கிறது. நான்கு உண்மைத் தத்துவங்களைச் சேர்ந்ததான அவிஜ்ஜை என்பதைச் சார்ந்து நின்று ஸங்ஸ்காரம் என்னும் எண்ணங்கள் நல்லதும் தீயதுமான இரண்டு விதமான உணர்ச்சிகளை உண்டாக்கின்றன.

நல்லனவாயினும் தீயனவாயினும் அறியாமையினால் ஏற்பட்ட இந்த எண்ணங்கள், பிறப்பு இறப்பு என்னும் ஸம்ஸாரத்தில் நெடுங்காலமாகச் சுழன்று உழலும்படி காரியப்படுத்துகிறது. ஆனாலும் ஸம்ஹாரத்திலிருந்து விடுபடுவதற்கு நல்ல செயல்கள் இன்றியமையாதன.

மனோ உணர்ச்சியாகிய ஸங்ஸ்காரத்தைச் சார்ந்து மறுபிறப்பு உணர்ச்சியாகிய விஞ்ஞானம் ஏற்படுகிறது. இது முற்பிறப்பையும் இப் பிறப்பையும் ஒன்று சேர்த்து இணைக்கிறது.

விஞ்ஞானம் என்னும் மறு பிறப்பு உணர்ச்சி ஏற்படுகிற அதே சமயத்திலே, நாமரூபம் என்னும் அருவுரு(உயிரும் உடம்பும்) ஏற்படுகிறது , நாமரூபம் என்னும் அருவுருவின்(உயிரோடு கூடிய உடம்பின்) தவிர்க்கப்படாததும் இன்றியமையாததுமான காரியம், ஆறுபுலன்களான சளாயதனங்கள், ஆறு புலன்களான சளாயதனங்களினாலே ஊறு என்னும் பஸ்ஸ ஏற்படுகிறது.

ஊறு(பஸ்ஸ) னின்று நுகர்வு(வேதனை) ஏற்படுகிறது.

இந்த ஐந்தும் அதாவது விஞ்ஞானம், நாமரூபம், சளாயதனம், பஸ்ஸ, வேதனை என்னும் இவ்வைந்தும் முற்பிறப்பின் செய்கைகள் எனப்படும். அதாவது கடந்த பிறப்பின் செயல் எனப்படும், நுகர்வு எனப்படும் வேதனையிலிருந்து வேட்கை(தண்ஹா) ஏற்படுகிறது.

வேட்கையில்(தண்ஹாவில்) இருந்து பற்று(உபாதானம்) உண்டாகிறது.

பற்றாகிய உபாதானம் கர்மத்திற்குக் காரணம் ஆகும். கர்மம் பிறப்புக்குக் காரணம் ஆகிறது.

பிறப்பானது நரை, திரை, மூப்பு, சாக்காடு என்பவற்றிற்கு காரணமாகிறது. காரணத்தினால் காரியம் ஏற்படுகிறது. காரணம் இல்லையானால் காரியமும் இல்லாமற் போகும்.

படிச்ச சமுப்பாதத்தை எதிர் முறையாகத் திருப்பிப் பார்த்தால் இவ் விஷயம் நன்கு விளங்கும்.

மூப்பு, சாக்காடு என்பன இரண்டும் உடம்புடன் தொடர்புடையனவாகும். உடம்பு என்பது ஆறு புலன்களையுடைய சட்டகம். இவ்வியல்புடைய உடம்பு பிறந்து கொண்டிருக்க வேண்டும். ஆகையால் அது பிறப்பை முன் கூட்டியே ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பிறப்பு என்பது முன் பிறப்பில் செய்யப்பட்ட செய்கையின்(கர்மத்தின்) தவிர்க்கமுடியாத பலனாகும்.

கர்மம் என்பது புலன்களிலே அதாவது உலக இன்பத்திலே பற்றுக் கொண்டிருப்பதனால்(ஊறினால் – பஸ்ஸ) உண்டாக்கப்படுகிறது. ஊறு அல்லது பஸ்ஸ என்பது நுகர்வை(வேதனை) ஏற்படுகிறது நுகர்வு என்னும் வேதனை எங்கேயிருக்கிறதோ அங்கே வேட்கை(தண்ஹா) இருக்கிறது. வேட்கை என்னும் தண்ஹா புலன்களிலே புலன் உணர்ச்சி உண்டாவதனால் ஏற்படுகிறது.

ஆகவே, புலன்களை உடையப் பொறிகளை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது நுகர்வு என்னும் வேதனை, புலன்களோடு கூடிய பொறிகளோ நாமரூபத்திலிருந்து(உடம்பிலிருந்து) பிரிந்திருக்க முடியாது. மனம் எங்கேயிருக்கிறதோ அங்கே உணர்வு(விஞ்ஞானம்) இருக்கிறது.

இந்த உயர்ந்த நிலையை அடைந்த பிறகுங்கூட மனோவுணர்ச்சிகள் அழிந்து விடாமல் செயலற்று அமைதியாகப் படிந்து கிடக்கின்றன. இவை திடீரென்று செயற்பட்டு மேலெழவும் கூடும். ஏனென்றால், சமாதி நிலையில் இவை முழுவதும் அழிக்கப்படாமல், அடக்கப்பட்டு தற்காலிகமாய் தூங்கிக் கிடக்கின்றன. இவை, எதிர்பாராதபடி எந்த நேரத்திலும் விழித்தெழுந்து செயலாற்றவும் கூடும்.

இவை கடந்த பிறப்பில் ஏற்றப்பட்ட நன்மை தீமைகளின் பலனால் உண்டாகின்றன. நன்மை தீமைகளான கர்மங்கள் அவாவினால் உண்டாகின்றன.

இந்த ஒழுங்கை(வாய்ப்பாட்டை) கீழ் கண்டவாறு சுருக்கிக் கூறலாம்.

“பேதைமை சார்வாச் செய்கை ஆகும்.
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்”

“உணர்ச்சி சார்வா அருவுரு ஆகும்
அருவுரு சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும் மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்று ஆகும் மே
பற்றிலே தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலைக் கையாறெனத்
தவலிறுத் துன்பந் தலைவரும் என்ப”

(மணிமேகலை 30-ஆம் காதை)

இவ்வாறு துன்பம் ஏற்படுகிறது. மேற் கூறிய இந்த வாய்ப்பாட்டு முறையில் முதல் இரண்டு(பேதைமை, செய்கை) இறந்தகாலம் என்பது. அடுத்த எட்டு நிதானங்கள்(உணர்ச்சி முதல் கருமத் தொகுதி வரையில்) நிகழ்காலம் என்று கூறப்படும். கடைசி இரண்டும்(தோற்றமும், மூப்பு, பிணி, சாக்காடு முதலியனவும்) எதிர் காலம் எனப்படும்.

அவிஜ்ஜை என்ற அஞ்ஞானம், அதாவது பேதைமை முழுதும் ஒழிந்தால் மற்றவை யாவும் ஒழிந்து விடுகின்றன.

“பேதைமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள வாயில் மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளும், கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும், தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்புப் பிணி மூப்புச்
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்றிக் கடையில் துன்பம்
எல்லாம் மீளும், இவ்வகையான் மீட்சி”

(மணிமேகலை 30-ஆம் காதை)

இவ்வாறு துக்க நீக்கத்திற்குக் காரணமான முறை உண்டாகிறது. இந்தக் காரண காரியங்கள் அநாதியாகத் தொடர்ந்து வருகின்றன. இவற்றின் தொடக்கம் எப்போது ஏற்பட்டது என்பதைத் தீர்மானமாகக் கூறமுடியாது. ஏனென்றால் அதன் காரணமான அஞ்ஞானம் எப்போது ஏற்பட்டது என்பது தெரியாதபடியினாலே. ஆனால், இந்த அஞ்ஞானமானது ஞானமாக மாற்றப்பட்டு, பிறவிச் சுழற்சி நிர்வாண தாதுவாக மாற்றப்படுமானால் ஸங்ஸாரம் என்னும் இறப்பும் பிறப்பும் நிறுத்தப்படும்.