நான்கு உன்னத வாய்மைகள் - Four Noble Truth
பௌத்தத்தின் அடிப்படையானத் தத்துவம் நான்கு உன்னத வாய்மைகள் (நான்கு பரம சாத்தியங்கள்) ஆகும். அவை துக்கம், துக்க காரணம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்தி மார்க்கம் என்பன.

துக்கம் என்பது என்ன ?
பிறப்பு துக்கம், மூப்பு துக்கம், நோய் துக்கம், இறப்பு துக்கம், விருப்பம் இல்லாவற்றுடன் சேர்ந்து இருப்பது துக்கம், நேசிப்பவைகளிடம் பிரிந்திருப்பது துக்கம், விரும்பியவற்றைப் பெறாமல் இருப்பது துக்கம், சுருக்கமாகக் கூறினால் ஐம்பொறிகளின் கூட்டுறவினால் ஏற்படுகிற பற்றுகள் எல்லாம் துக்கம் உடையன.

துக்க காரணம் என்பது என்ன ?
காம விகாரச் சிற்றின்பத் தொடர்புடையதும், இங்கு அனுபவித்த பிறகு பிறிதோரிடத்தில் அனுபவிக்கப்படுவதும், மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமும் ஆக உள்ள ஆசை(அவா ) தான் துக்கத்திற்குத் காரணமாகும். காம இச்சையிலும் , பிறவி சூழலிலும், ஆசையுடையதாய் நாசத்துக்கும் காரணமாக உள்ளது அவாவாகும்.

துக்க நிவாரணம் என்பது என்ன ?
கொஞ்சமும் பாக்கியில்லாமல் (அவாவை ) ஆசையை அடியோடு நிர்மூலப்படுத்தி அதிலிருந்து விலகித் தப்பித்து விடுதலையடைவதுதான் துக்க நிவாரணம் ஆகும்.

துக்க நிவாரண மார்க்கம் என்பது என்ன ?
இது அஷ்டாங்க மார்க்கம் என்னும் எட்டுவித வழிகளையுடையதாகும். அவை நாற்காட்சி, நல்லொழுக்கம், நல்வாய்மை, நல்வாழ்க்கை, நெற்செய்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுணர்தோர் தலைப்பாடு என்பன.

உலகத்திலே புத்தர்கள் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் மேற்கூறிய நான்கு வாய்மைகளும் (சாத்தியங்களும் ) என்றும் நிலை பெற்றிருக்கின்றன. இவை காலம் என்னும் குழியில் அமிழ்ந்து மறைந்து போனபோது புத்தர்கள் தோன்றி இந்தச் சத்தியங்களை உலகத்துக்கு வெளிப்படுத்துகிறார்கள்

சயன்ஸ் என்னும் விஞ்ஞானப்படிக் கூறுவது என்றல், பௌத்த மதத்தைக் காரண காரிய வாதம் என்று கூறலாம். இவ்விரண்டும் புத்தருடைய உபதேசங்களில் அடங்கியிருக்கின்றன.

அவா (ஆசை) என்பது காரணம், துக்கம் அதனுடைய காரியம், மத்திய வழி காரணம், நிர்வாண மோக்ஷம் அதனுடைய காரியம்.

துக்கம் என்பதைப் பௌத்தம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இப்படிக் கூறுவதானால் உலகத்தைத் துன்பமாகக் காண்கிறது பௌத்த மதம் என்று கருத வேண்டாம்.பௌத்த மதம் உலகத்தை துக்கமாகவும் காணவில்லை, சந்தோஷமாகவும் காணவில்லை. இவற்றிக்கு இடைப்பட்ட பொதுவான உண்மையை போதிக்கிறது.

பகவான் புத்தர் துக்கத்தைப்பற்றி மட்டும் சொல்லி விட்டு அதை நீக்கும் வழியைக் கூறாமற்போயிருந்தால் அவரை துக்கவாதி என்று கூறலாம். உலகத்தில் துக்கம் இருப்பதைப் புத்தர் கண்டார். கண்டு, அத்துக்கத்திலிருந்து நீங்கும் வழியையும் கூறியிருக்கிறார்.

பகவான் புத்தர் தமது சாதாரணச் சீடர்களிடத்திலும் மிகப் பொறுமையாக இருந்தார். அவர்களுக்குக் கட்டளையிட்டு ஏவினார் இல்லை. கட்டளையிடுவதற்குப் பதிலாக “இதைச் செய்வது உமக்குத் தகுதியாக இருக்கும்; இப்படிச் செய்யாமலிருப்பது உமக்குத் தகுதியாக இருக்கும்” என்று வெகு மரியாதையாகக் கூறுவது வழக்கம்.