நிர்வாணம் - Nibbana

ஓயாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிற இறத்தல் பிறத்தல் என்னும் நிலைமையை மாற்றி, அதை நிர்வாண தாதுவாகச் செய்வது தான் பௌத்தமதத்தின் முடிந்த நோக்கம் ஆகும். நிப்பாணம் என்னும் பாலி மொழி நி வாணம் என்னும் இரண்டு சொற்களைக் கொண்டது. நி என்பது இன்மை என்னும் எதிர்மறைப் பொருள் உடையது. வாணம் என்பது அவா அல்லது ஆசை என்று பொருள்படும். வாணம் என்னும் அவா அல்லது ஆசையிலிருந்து விடுபடுவது என்று பொருள் உடையது நிப்பாணம் என்னும் சொல். இது சமஸ்கிருதத்தில் நிர்வாணம் எனப்படும்.

காமம், குரோதம், அஞ்ஞானம் என்பவற்றிலிருந்து நீங்குவது என்று கூறினும் பொருந்தும். பகவான் புத்தர் கூறுகிறார்: “உலகம் முழுவதும் தீ பற்றி எரிகிறது! என்ன தீ? ஆசைத் தீ, பகைமைத் தீ, அறியாமைத் தீ, பிறப்பு, மூப்பு, இறப்பு, என்னும் தீ, அவலம், கவலை கையாறு, துன்பம் முதலிய நோயாகிய தீ உலகத்தில் மண்டி எரிகிறது !”

உலக அறிவைக் கொண்டு கண்டறிய முடியாத படியினாலே நிர்வாண மோக்ஷம் என்பதை அழிந்த நிலை அதாவது ஒன்றும் அற்ற நிலை என்று கருதி விடக்கூடாது. குருடன் வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை என்பதற்காக வெளிச்சமே கிடையாது என்று கூறிவிட முடியுமா? நிலம் என்னும் உண்டென்பதை அறியாத, நீரில்வாழும் மீன் ஒன்று தனது நண்பனாகிய ஆமையிடம் நிலம் என்னும் பொருளே கிடையாது என்று சொல்லிற்றாம்.

பௌத்தர்களுடைய நிர்வாண மோக்ஷம் என்பது ஒன்றும் அற்ற பாழ் என்று கருத வேண்டாம். அதைப் பற்றித் தெளிவாகச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு உயர்ந்த நிலையாகும் அது. நிர்வாண மோக்ஷம் என்பது ‘மீண்டும் பிறவாமை, உற்பத்தியாகாமை, சிருஷ்டிக்கப்படாமை, உருவமைக்கப்படாமை’ ஆகிய ஒரு தர்மம் ஆகும்.

ஆகவே அது அழிவில்லாத திவ்விய, விரும்பத் தக்க சுபகரமான ஆனந்த சுககரமான நிலையாகும். நூல்களில் நிர்வாணத்தைப் பற்றிப் பேசும் போது ஸோபாதி ஸேஸ-என்றும், அநுபாதிஸேஸ என்றும் இரண்டு விதிகள் கூறப்படுகின்றன. உண்மையில் இரண்டு விதமான நிர்வாண மோக்ஷம் கிடையாது. ஒரே நிர்வாண மோக்ஷம்தான். இறப்பதற்கு முன் தேகத்தோடுகூடி அனுபவிக்கப்படுகிறதும், இறந்த பிறகு அனுபவிக்கப்படுகிறதும் என இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஸோபாதிஸேஸ: ஒரு பெரியவர் நிர்வாண மோக்ஷத்தை அடைந்திருந்தாலும் அல்லது அதை அடைவதற்குரிய நிலையை அடைந்திருந்தாலும் உடம்பு இன்னும் தங்கியுள்ளது. இந்த நிலைதான் ஸோபாதிஸேஸ என்பது அதாவது அரஹந்தர்கள். இந்த உடம்பிருக்கும் போதே இந்த வாழ்விலேயே நிர்வாண மோக்ஷ இன்பத்தைத் துய்ந்துக்கொண்டிருக்கும் நிலை.

அநுபாதிஸேஸ: அரஹந்தர்களும் புத்தர்களும் இந்த உடம்பை விட்டுப் பிரிந்த பிறகு அனுபவிக்கும் நிர்வாணமோக்ஷ நிலை. இது உடம்பு வீழ்ந்த பிறகு உள்ள நிலை. நிர்வாண மோக்ஷம் என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் உள்ளது அல்ல. அல்லது மிக உயர்ந்த ஜீவன்கள் தங்கியுள்ள சுவர்க்கலோகமும் அல்ல. நிர்வாண மோக்ஷமானது இந்த உடம்பிலேயே உணர்ந்து அடைந்து அனுபவிக்கப்படும் ஒப்பற்ற உயர்ந்த நிலையாகும்.