நிர்வாண மோக்ஷ வழி - Path of Nibbana

நிர்வாண மோக்ஷ இன்பத்தை அடைவது எப்படி?

எட்டுவிதமான வழிகளை, அஷ்டாங்க மார்க்கத்தை மேற்கொண்டு ஒழுகினால் இதனை அடையலாம். அஷ்டாங்க மார்க்கத்தில் ஒழுக்கம்(சீல), தியானம்(சமாதி), ஞானம்(பஞ்ஞா) ஆகிய மூன்றும் அடங்கியுள்ளன.

புத்தர் அழகான இந்த சுலோகத்தினாலே கூறியுள்ளார்.
ஸப்ப பாபஸ்ஸ அகரணங்
குஸலஸ்ஸ உபஸம்பதா
ஸசித்த பரியோ தபனங்
ஏதங் புத்தான ஸாஸனங்

‘எல்லாத் தீமைகளினின்றும் நீங்கி நல்லவற்றையே செய்வது; அறிவைத் துலக்கி ஞானத்தை வளர்ப்பது; இவை தான் புத்தர்களுடைய உபதேசம்’ என்பது இதன் பொருள்.

சீலம் என்னும் ஒழுக்கந்தான் நிர்வாண மோக்ஷத்திற்கு முதல்படியாகும். ஓர் உயிரையும் கொல்லாமலும் அவற்றிற்கு எவ்விதமான தீங்கும் செய்யாமலும் இருப்பதோடு எல்லா உயிர்களிடத்திலும், மிக அற்பப் பிராணியிடத்திலும்கூட அன்பாக இருக்கவேண்டும். மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ பிறருடைய பொருளைக் களவு செய்யாமல் எல்லா விதத்திலும் எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும்.

மனிதனுடைய உயரிய நிலையைக் குன்றச் செய்கிற முறை கடந்த சிற்றின்பத்தை விட்டு நீங்கி, கற்பும் பரிசுத்தமும் ஆக இருக்கவேண்டும். பொய் பேசாமல் உண்மையையே பேசவேண்டும். சோம்பலையும், மயக்கத்தையும் தருகிற மதுபானங்களை உட்கொள்ளாமல் தெளிவுள்ளவராயும் சுறுசுறுப்பும், அறிவும் உள்ளவராயும் இருக்கவேண்டும்.

இந்த ஐந்து கட்டளைகளும்(சீலங்களும்) ஆரம்ப ஒழுக்கங்களாகும். இதற்குப் பிறகு எட்டு அல்லது பத்து கட்டளைகளையும்(சீலங்களையும்) மேற்கொண்டு ஒழுகலாம். அவை:

மேற்சொன்ன பஞ்ச சீலங்களை(ஐந்து ஒழுக்கங்களை) அனுஷ்டித்த பிறகு சிற்றின்பத்தை அறவே விடவேண்டும். சுத்தமான மனதுடன் இருக்கவேண்டும். செல்வத்தை வெறுத்து ஏழ்மையை மேற்கொண்டு, தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும். சோம்பலும் உலகப்பற்றும் ஏற்படாதபடி உணவைக் கொஞ்சமாக உண்ண வேண்டும்.

அடக்கமான வார்த்தைகளையும், செயலையும் மேற்கொண்டு ஐம்புலன்களை அடக்கி ஒருவர் ஒழுகுவாரானால், பின்னர் உலக இன்பங்களைத் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொள்கிறார். பிறகு அவருக்கு இவ்வித எண்ணம் உண்டாகிறது.

“இல்லற வாழ்க்கைத் துன்பமும் துக்கமும் கலக்கமும் நிறைந்த இருண்ட குகை போன்றது. துறவற வாழ்க்கையோ ஆகாயத்தைப்போல உயர்ந்து விரிந்து பரந்து சுயேச்சையுள்ளது.”

இவ்வாறு துறவி வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு பௌத்தர், பிக்குவின் உருவத்தில் எளியதான வறுமை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு உயர்ந்த நான்கு சீலங்களை அனுஷ்டிக்கிறார். அவை: பாதிமொக்க ஸம்வர ஸீலம் என்னும் ஒழுக்கம், இந்திரிய சம்வரசீலம் என்னும் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஒழுக்கம், பிரத்திய சந்நிஸ்ஸிரித ஸீலம் என்னும் வாழ்க்கைக்கு அவசியமானவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளும் ஒழுக்கம் என்பன.

இந்த நான்கு சீலங்களையும் அடைந்து, இதில் நிலைபெற்ற பிறகு, இதற்கும் உயர்ந்தபடியான சமாதி என்னும் நிலையை இந்தத் துறவி அடைகிறார்.

சமாதி என்பது மனதை ஒரு நிலைப்படுத்துவது. பொருந்தாத சிந்தனை களையெல்லாம் அறவே விலக்கி மனதை ஒரு குறியில் வைத்து ஒரு நிலைப்படுத்தி தியானத்தில் இருத்தல். இவ்வாறு வேண்டப்படாத எண்ணங்களை அறவே விலக்கி, மனதை ஒரு முகப்படுத்தி ஒரு குறியில் நிறுத்தித் தியானிக்கப் பழகுவதனாலே, அவருடைய மனம் இந்தச் சமாதியிலேயே லயித்து நின்று வேறு எண்ணங்கள் எல்லாம் அவரது மனத்தை விட்டு அறவே ஒழிந்துவிடுகின்றன.

அவர் சமாதி நிலையிலே ஒருமுகப்பட்ட மனத்துடன் இருக்கிறார். மோக்ஷ வழிக்குத் தடையாயிருக்கிற பஞ்சேந்திரிய ஆசைகளும், பகை, கோபம், மறதி, அடக்கமின்மை, ஐயம் முதலியவைகள் தடுக்கப்படுகின்றன. கடைசியில் பரவசமான தியான நிலையில், சொல்லொணாத ஆனந்தத்தோடு கூடிய ஞானத்தையடைந்து, சாந்தத்தையும் சமாதி நிலையின் அமைதியையும் அடையப் பெறுகிறார்.

மனமானது முழுதும் ஒன்றுபட்டுச் சமாதி நிலையை அடைந்த பிறகு அபிஞ்ஞா என்னும் ஐந்து சக்திகளைப் பெறமுடியும். அவையாவன: திப்பசக்கு என்னும் தூரதிருஷ்டிப் பார்வை, திப்ப ஸோத என்னும் தூரத்திலிருந்து கேட்டறிதல், புப்பே நிவாஸானுஸ்ஸதி ஞானம் என்னும் பழம் பிறப்புக்களையுணரும் அறிவு, பரசித்த விஜானனம் என்னும் பிறருடைய எண்ணங்களை அறியும் ஆற்றல், இத்திவித என்னும் பலவிதமான மனோதத்துவ அறிவுகளை உணர்தல் என்பனவாம்.

இந்த உயர்ந்த நிலையை அடைந்த பிறகுங்கூட மனோவுணர்ச்சிகள் அழிந்து விடாமல் செயலற்று அமைதியாகப் படிந்து கிடக்கின்றன. இவை திடீரென்று செயற்பட்டு மேலெழவும் கூடும். ஏனென்றால், சமாதி நிலையில் இவை முழுவதும் அழிக்கப்படாமல், அடக்கப்பட்டு தற்காலிகமாய் தூங்கிக் கிடக்கின்றன. இவை, எதிர்பாராதபடி எந்த நேரத்திலும் விழித்தெழுந்து செயலாற்றவும் கூடும்.

பழக்கமும் தியானமும்(சமாதி) தடைகளை நீக்க உதவி செய்கின்றன. ஆனாலும், விபஸ்ஸனா பஞ்ஞா என்னும் நுண்ணறிவுதான்(அழுந்த கூர்மையான அறிவுதான) பொருள்களை உள்ளது உள்ளவாறு காணச் செய்கிறது. இந்த அறிவினால், சமாதியினால் கட்டப்பட்டு அடங்கிக் கிடக்கும் மனோவுணர்ச்சிகளை முழுவதும் அழியச்செய்து முடிவான நிலையை அடைய முடியும். நிர்வாண மோக்ஷத்திற்கு இது மூன்றாவதும் கடைசியானதுமான நிலையாகும்.

ஏக சித்த நிலையிலே, மெருகிடப்பட்ட கண்ணாடிபோல் மனம் தூய்மையடையப் பெற்றிருப்பதால், உலக வாழ்க்கையின் உண்மையான நிலையைக் கண்டறிய முடியும். இந்த நிலையிலும் எந்தப் பக்கம் பார்த்தாலும் மூன்று விஷயம் தவிர . வேறு ஒன்றும் தோன்றாது.

இந்த மூன்று விஷயங்கள் யாவை எனில், அநிச்சம்(நிலையாமை), துக்கம், அநாத்மம்(ஆத்மா இல்லாத தன்மை). இவ்வித உயர்ந்த நிலையையடைந்த பிக்குவானவர், வாழ்க்கையானது இடையீடின்றி எப்பொழுதும் விரைவாகச் சென்றுகொண்டிருக்கின்ற ஓர் இயக்கம் என்பது அறிகிறார்.

தேவலோகத்திலாயினும் மண்ணுலகத்திலாயினும் தூய்மையான இன்பத்தைக் காண்கிறார் இல்லை. ஏனென்றால், எத்தகைய இன்பமும் துக்கத்திற்கு முதற்காரணமாக இருக்கிறது. ஆகையால் நிலையற்றதாகவுள்ள எதுவும் துன்பமுடையது. எங்கே நிலையாமையும் துக்கமும் இருக்கிறதோ அங்கே நிலையுள்ளதான அழியாத உயிர் இருக்க முடியாது.

பிறகு, உயர்ந்த நிலையை அடைந்த அவர், மேற்கூறப்பட்ட மூன்று விஷயங்களில் எது மனதில் ஊன்றிப் பதிகிறதோ அதைப் பற்றிக்கொண்டு, அதனையே நுண்ணுணர்வினால் சிந்தித்துச் சிந்தித்து அவ்வுணர்ச்சியை வளர்த்து, மூன்று தலைகளாகிய சக்காயதிட்டி என்னும் மனமயக்கம், விசிகிச்சா என்னும் ஐயப்பாடுகள், ஸீலப்பதபராமாஸ என்னும் தவறான கிரியைகள்(சடங்குகள்)ஆகிய இவற்றை முற்றும் ஒழித்து தமது வாழ்க்கையில் முதல் தடவையாக நிர்வாண மோக்ஷத்தைக் கைவரப் பெறுகிறார்.

இந் நிலையில் அவர் ஸோதாபன்னர் என்று கூறப்படுகிறார். அதாவது நிர்வாண மோக்ஷத்திற்கு இழுத்துச் செல்கின்ற ஆற்றொழுக்கில் சேரப்பெற்றவர் என்று கூறப்படுகிறார். ஆயினும் அவர் உயிர்வாழ வேண்டும் என்னும் எண்ணத்தை அடியோடு ஒழிக்காதபடியினாலே ஏழுதடவை மீண்டும் மீண்டும் பிறக்கிறார்.

நிர்வாண மோக்ஷத்தைத் தூரத்திலிருந்து கண்டவர் ஆகையினாலே அவர், ஊக்கம் பெற்று மேன்மேலும் நுண்ணறிவை(ஆத்ம அறிவை) வளர்த்து அதிலே வளர்ச்சியடைந்து ஸகதாகாமி(ஒரு பிறப்புடையவர்) ஆகிறார்.

இப்போது அவர் காமராகம் என்னும் ஐம்புல விருப்பமும், படிக என்னும் தீய எண்ணங்களும் ஆகிய இரண்டு தலைகளைச் சற்றுத் தளர்த்திவிடுகிறார். அந் நிலையில் அவர் அரஹந்தர் ஆகாவிட்டால், ஸகதாகாமி ஆகிறார். ஏனென்றால் உலகத்திலே இனி ஒரே ஒரு பிறப்புதான் பிறப்பார்.

பிறகு மூன்றாவது நிலையான பரிசுத்தமான மகா முனிவர் நிலையை அனாகாமி நிலையை அடைகிறார். இந்த நிலையில் மேலே கூறிய இரண்டு தலைகள் முழுவதையும் நீக்கி விடுகிறார். அவர், சிற்றின்ப எண்ணங்களை(உலக இச்சைகளை) அடியோடு விட்டுவிட்ட படியினாலே, இந்த உலகத்திலாயினும் தேவலோகத்திலாயினும் பிறக்கமாட்டார்.

அவர் இறந்த பிறகு சுத்தா வாசம் என்னும் பரிசுத்தமான இடத்தில் பிறக்கிறார். இந்தப் பரிசுத்தமான சுத்தாவாசம் என்னும் இடம் அனாகாமிகளும் அரஹந்தர்களும் நிர்வாண மோக்ஷத்திற்குச் செல்வதற்கு முன்பு தங்குகிற இடமாகும்.

பின்னர், தன் முயற்சியினால், இதற்கு முன்பு அடையப்பெறாத வெற்றியைக்கொண்டு, அவர் கடைசியாக மிகுந்துள்ள தலைகளாகிய ரூபலோகங்களில் வாழவேண்டும் என்னும் ஆசை(ரூபராகம்) அரூபலோகங்களில் வாழவேண்டும் என்னும் ஆசை(அரூபராகம்), அகந்தை(மானம்), அமைதியின்மை(உத்தக்கம்), அறியாமை(அவிஜ்ஜை) என்பனவற்றை அறிந்து எறிந்து மிக உயர்ந்த அரஹந்த பதவியை அடைகிறார்.

உடனே, தான் எதை அடையவேண்டுமோ அதை அடையப் பெற்றதையும், தன்மீதிருந்த துக்கம் என்னும் பளுவான சுமையை இறக்கிவிட்டதையும், வாழவேண்டும் என்னும் ஆசையை அடியோடு ஒழித்துவிட்டதையும், நிர்வாண மோக்ஷத்தின் பாதையில் சென்று கொண்டிருப்பதையும் அறிகிறார்.

இவ்வாறு நன்மையைடையப் பெற்ற அவர் தேவர்களுக்கும் மேற்பட்ட உயர்ந்த இடத்தில் நின்று, கலகமிடுகின்ற ஐம்புலன்களினின்றும், உலகத்தில் உள்ள தீமைகளினின்றும் வெகு தூரம் விலகிச்சென்று நிர்வாண மோக்ஷத்தின் சொல்லொணாத பேரின்பத்தை உணர்ந்து தனக்குத் தானே பாடுகின்றார்.

அருளும், ஞானமும் நன்னெறியில் பழக்கப்பட்ட மனமும், நல்ல நீதியும் அடிப்படையாகக் கொண்ட மேலான ஒழுக்கமும், ஆகிய இவை மனிதனைப் பரிசுத்தப்படுத்துகின்றன என்னும் கருத்துள்ள வெற்றிப்பாட்டைப் பாடுகின்றார்.