மறு பிறப்பு - Re-Birth
Unsatisfied desire for existence and sensual pleasures is the cause of rebirth.

கர்ம பலன் உள்ள வரையில் மறுபிறப்பு இருக்கிறது. கண்னுக்குத் தெரியாத கர்ம பலத்தினுடைய உற்பத்திதான் பிராணிகளும் மனிதரும் என்றறியவேண்டும். சாவு அல்லது இறப்பு என்பது தற்காலிகமான முடிவு. உயிர் என்று கூறப்படுகிற பொருள் முழுவதும் முடிந்து விடுகிற காரியம் அன்று சாவு என்பது. ஐம்பூத சம்பந்தமான வாழ்வு முடிவடைந்து விட்டாலும், அதனை இதுவரையில் நடத்திக்கொண்டிருந்த சக்தி அழியவில்லை. அழிந்து போகிற பூத உடம்பிலிருந்து கர்ம சக்தியானது முழுவதும் அழிக்கப்படாமல் அப்படியே உள்ள வரையிலும் உணர்ச்சிகள் மறைந்து விட்டாலும்(உடம்பு இறந்து விட்டாலும்)மறு பிறப்பு இருந்து கொண்டேயிருக்கிறது.

ஆகவே, பிறப்பு சாவுக்கு முந்தியது. அதேபோன்று சாவு பிறப்புக்கு முந்தியது. இவ்வாறு ஒரு உயிர் தொடர்ச்சியாகப் பிறப்பதும் இறப்பதுமாக உள்ள நிலையைத் தான் சங்ஸாரம்(மீண்டும் மீண்டும் சஞ்சரித்தல்)என்று கூறப்படுகிறது.

சங்ஸாரத்தின்(பிறப்பு இறப்பினுடைய)முக்கிய ஆரம்பம் எது ? அதாவது பிறப்பின் தொடக்கம் யாது ?

பகவான் புத்தர் கூறுகிறார்: அறியமுடியாத தொடர்பையுடையது ஸங்ஸாரம். உயிர் அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு, அவாவினால்(ஆசையில்)கட்டுண்டு, உலக இச்சையில் பற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்கிறது.

உயிர் என்றும் உள்ளதாய் அழியாததாய் இருந்தால் அது முடிவான தொடக்கத்தையுடையதாய் இருக்கவேண்டும். கண்டிப்பாகக் கூறுவது என்றால் உயிரை ஒரு சக்தி என்று கூறலாம். ஆகவே அது தொடக்கம் அற்றது.

உயிர் ஒரு காலத்தில் தோன்றிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு அது தோன்றியதற்குக் காரணபூதராக இருந்தவர் கடவுள் என்றும் சிலர் வாதிக்கிறார்கள். அப்படியானால், இவ்வாறு யூகிக்கப்படுகிற அந்தக் கடவுள் தோன்றியதற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும்.

கடவுள் கொள்கையுடைய ஒருவர், ” ஓ!கடவுள் மனிதனால் அறிய முடியாத அவ்வளவு பெரியவர் ‘, என்று கூறுவார்.

அப்படியானால், அக்கடவுளுடைய குணங்களும் நம்முடைய எண்ணங்களால் அறியமுடியாதவை. ஆகவே, அவரை நாம் அறியவும் முடியாது; அவரைப் படைப்புக் கர்த்தர் என்று கற்பிக்கவும் முடியாது.

ஆரம்பம் அற்றதான காலத்தின் தொடக்கம் எப்போது உண்டாயிற்று என்பதை வீணாக ஆராய்ந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, மறுபிறப்பின் காரணத்தைக் கண்டறியவும், உயிரின் பிறப்பாகிய சஞ்சாரத்தைத் தடுக்கவும், சுத்த நிலையாகிய நிர்வாண மோக்ஷத்தை அடையவும் நம்முடைய ஆற்றலை உபயோகப்படுத்தும்படி பகவான் புத்தர் அறிவுறுத்தியிருக்கிறார்.

பிறப்பு இறப்புக்களின் காரணங்களை ஆராயும் போது, உயிர் இங்கு, இப்போது உள்ள நிலையிலிருந்து ஆராயத் தொடங்கி, இந்த நிலையடைந்ததன் பழைய காரணத்தை ஆராய்ச்சி செய்கிறது பௌத்தமதம்.

பௌத்தமதக் கருத்துப்படி, எல்லா விலங்குகளும் மக்களும் ஆகிய பிறப்பானது மனமும் உடம்பும் ஒன்று சேரப்பட்ட நிலையாகும், அதாவது நாமரூபம்(அருவுரு) ஆகிய இரண்டு பொருள்களும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதே பிறப்பு என்பது. இவை(நாமரூபம் – மனமும் உடம்பும்)நிமிஷந்தோறும் அதிவேகமாக மாறிக்கொண்டேயிருக்கின்றன.

பிறப்புகள் யாவும், மனதையும் உடம்பையும்(நாமரூபம்)உடையனவாக இருந்தும், வேறு வேறாக மாறுபட்டுள்ளன; ஒரே தன்மையாக இருப்பதில்லை. மக்கள் பிறவியிலுங் கூட ஒரே தன்மையுள்ள இரண்டு ஆட்களைப் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தமக்கென்று வெவ்வேறு விதமான போங்கைப் பொற்றிருக்கிறார்.

ஆகவே, ஒரு தனி ஆளின் உற்பத்தியை ஆராயப் புகுந்து, அவர் பிறப்புக்குக் காரணமான கருப்பையை ஆராய்ந்து பார்த்தால் அதில் மீண்டும் இரண்டு பொருட்களை – சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டு பொருட்களைக் காண்கிறோம். இப்போழுது, இந்த இரண்டு பொருள்கள் மட்டுந்தான் அந்த ஆள் உற்பத்திக்குக் காரணமா என்று மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. இக் தேள்விக்கு இல்லை என்று விடையிருக்கக்கட்டாயம் ஏற்படுகின்றது.

ஏனென்றால் சுக்கிலமும் சுரோணிதமும் சேர்ந்து கரு உண்டாகிறதில்லை, இந்த இரண்டு பொருட்களோடு மூன்றாவதான வேறொரு பொருளும் சேர்ந்து தான் கரு ஏற்படுகின்றது என்று பௌத்தமதம் கூறுகின்றது. இந்த மூன்றாவது பொருளின் சேர்க்கையினாலே உருவம் உண்டாகின்றது. ஆண் பெண் சேர்க்கை ஏற்பட்டும், கர்ப்பம்(இன்ப உணர்ச்சி)ஏற்படவில்லையானால் உயிரின் அங்குரம்(கரு)ஏற்படாது. =ஸ்திரீக்குரியச் சரியான காலத்தில் ஆண் சேர்க்கை ஏற்பட்டு இன்ப உணர்ச்சியும்(கந்தப்பம்)உண்டாகுமானால், அப்போது உயிரின் அங்குரம்(கரு)ஏற்படுகிறது என்று பகவான் புத்தர் கூறியுள்ளார்.

புதிதாகக் காணப்பட்ட இந்த அம்சம், அபிதர்மத்தின் பிரகாரம், படிஸந்தி விஞ்ஞானம்(இணைப்பு உணர்ச்சி)என்று கூறப்படும் பிறப்பு உண்டாகி வளர்வதன் முதல் எல்லையைக் கண்டோம். ஆனால், மேலும் சென்று ஆராய்ந்து இந்தப் படிஸந்தி விஞ்ஞானத்தின்(இணைப்பு உணர்ச்சியின்)காரணத்தை அறிந்து தீர்மானிக்க நம்முடைய சிற்றறிவு நமக்கு உதவி செய்யவில்லை.

ஆனால், பகவான் புத்தர் மனித அறிவுக்கும் அப்பாற்பட்ட நுண்ணறிவை வளர்த்தவர். ஆகையினாலே அவர் சாதாரண அறிவையும் கடந்து அப்பாற் சென்று இந்த மூன்றாவதாக உள்ள, பொருளின் அடிப்படையையும் கண்டறிந்தார். படிஸந்தி விஞ்ஞான உணர்ச்சி ஏற்படுவதன் காரணம் யாதெனில் முற்பிறப்பில் உண்டாகியிருந்த விஞ்ஞான உணர்வு(Conciousness) பிரிந்து போய் புதிய விஞ்ஞான உணர்வு ஏற்படுவதினால் ஆகிறது என்றும், உருவமாகத் தோன்றுகிறவைகளும் மறைகிறவைகளும் ஆகிய செயல்கள் கர்மத்தினுடைய ஆற்றலினால் ஏற்படுகின்றன என்றும் பகவான் புத்தர் கூறியுள்ளார்.

இவற்றிற்குச் சான்றுகள் காட்டும்படிக் கேட்கக்கூடும். இதற்குச் சான்று, மேஜைமேல் பொருள்களை வைத்துப் பரிசோதித்து அறிவது போல அறியத்தக்கது அன்று என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறோம்.

முற் பிறப்பில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினசரி வாழ்க்கையைப்பற்றி மனித அறிவினால் அறியப்படாதச் சிலவற்றை ஏற்றுக்கொள்வதற்கு மேற்சொன்னவை தகுதியான யூகங்களாக இருக்கின்றன. இரட்டைப் பிறப்பாளர்களான சகோதராக்குள்ளும் காணப்படுகின்ற, பல்வேறு வித்தியாசங்களுக்குக் காரணம், கர்மம் முற்பிறப்பு என்பவைகள் தாம் என்பதை நமது யூகங்கள் தெரிவிக்கின்றன.

வெவ்வேறுவிதமான மனோவுணர்ச்சியுள்ள மக்களின் இயற்கைகளையும், இயற்கைத் தோற்றம் முதலியவற்றையும், உலகத்திலே பல வேறுபாடுள்ளவைகளாகக் காணப்படும் எண்ணங்கள், ஒழுக்கங்களையும், மனத்தினதும் உடம்பினதுமான ஆன வித்தியாசங்களையும், சுற்றுச் சார்புகளையும், இவைபோன்ற இயற்கையில் காணப்படுகிற வித்தியாசங்களை எல்லாம், ஷேக்ஸ்பியர் போன்ற சாதாரண அனுபவம் உள்ளவர்கள் தாங்கள் நேரடியான அனுபவம் வாய்க்கப் பெறாதவர்களாக இருந்தும், தெளிவாகவும், நுட்பமாகவும் விளக்கிக் காட்டியுள்ளார்கள் என்பதை நமது யூகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கர்மத்தின் காரணம் யாதென்றால், நான்கு உண்மைத் தத்துவங்களைச் சேர்ந்ததான அறியாமை(அவிஜ்ஜை)தான் என்று பகவான் புத்தர் கூறியுள்ளார். ஆகவே, அறியாமை தான்(அவிஜ்ஜை தான்)மாறினால் அது பிறப்பு இறப்புக்களின் நீக்கத்திற்குக் காரணமாகிறது.

இவ்வாறு விபஜ்ஜ முறைப்படிப் பிரித்து ஆராய்ந்து பார்ப்பதை படிச்ச சமுப்பாதம் என்னும் நூலில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.