Benefits of Meditation

போட்டிகள் நிலவும் இவ்வுலகில் மகிழ்ச்சியை அடைவதற்காக மனிதன் எவ்வளவோ செய்ய வேண்டியதாக உள்ளது. அதன் பின் தியானம் ஏன்?

நீங்கள் தியானம் பயின்றால் வரக்கூடிய நலன்களில் சில :-

நீங்கள் ஓயாத வேலை செய்பவரானால் தியானம் உங்கள் இறுக்கத்தை அகற்றவும் சிறிது ஓய்வு பெறவும் உதவும்.

நீங்கள் கவலைப்படுபவரானால், இந்த தியானம் உங்கள் கவலைகளை அமைதிப்படுத்தவும் நிரந்தரமான அல்லது தற்காலிகமான அமைதி காணவும் உதவி புரியும்.

நீங்கள் முடிவில்லாத பிரச்சினைகள் கொண்டவரானால், இந்த தியானம் இப்பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், வெற்றிகொள்ளவும், தேவையான துணிவையும், வலிமையையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள உதவும்.

நீங்கள் தன்னம்பிக்கை இல்லாதவரானால், இந்தத் தியானம் உங்களுகுத் தேவையான தன்னம்பிக்கையைப் பெற உதவிபுரிய முடியும். உங்கள் வெற்றியின் ரகசியம் இந்த தன்னம்பிக்கையே.

நீங்கள் நெஞ்சில் அச்சம் இருந்தால், இந்தத் தியானம் உங்களை அச்சுறுத்தும் பொருட்களின் உண்மையான இயல்பை நீங்கள் விளங்கிக்கொள்ள உதவும்.

நீங்கள் எப்பொழுதும் எல்லாவற்றோடும் திருப்தியற்றவராக, நிறைவளிக்காதவராக இருக்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கு உள்ளார்ந்த நிறைவை ஓரளவு வளர்த்துக் கொள்ளவும் பேணிக்காக்கவும் வாய்ப்பளிக்கும்.

நீங்கள் இந்த வாழ்க்கை மற்றும் உலகத்தின் இயல்புகளை சரிவர புரிந்துகொள்ளாத காரணத்தால், விரக்தியுற்றவராகவும், மனமுடைந்தவராகவும் இருந்தால், இந்த தியானம் நீங்கள் அவசியமற்றவைகளுக்காகவே தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள உதவும், மேலும் உங்களுக்கு உண்மையாகவே வழிகாட்டும்.

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இந்த தியானம் உங்களது நினைவாற்றலைப் பெருக்கவும், மேலும் திறமையாக கற்கவும் உதவிபுரியும்.

நீங்கள் ஒரு செல்வந்தராக இருந்தால், இந்தத் தியானம் உங்களது செல்வத்தின் இயல்பை நீங்கள் உணர்வற்கும், அதை உங்களது சொந்த மகிழ்ச்சிக்காகவும், பிறருடைய மகிழ்ச்சிக்காகவும் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதை அறிந்துகொள்ளவும் உதவிபுரியும்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சாலைச் சந்திப்பில் நிற்கும் ஒரு இளைஞரானால் - எந்த வழியை மேற்கொள்வது என்று தெரியாமல் இருந்தால் இந்த தியானம் நீங்கள் உங்களது சரியான இலக்கை அடைய எந்த வழி உற்றது என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள உதவிபுரியும்.

நீங்கள் வாழ்க்கை சலித்துப்போன ஒரு முதியவராக இருந்தால், இந்த தியானம் உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய மேலும் ஆழமான ஒரு விளக்கத்தைத் தரும். இவ்விளக்கம் உங்கள் வாழ்க்கை துயரங்களிலிருந்து விடுவித்து, வாழ்வின் மகிழ்ச்சியை மேம்படுத்தும்.

நீங்கள் ஒரு கோபக்காரரானால், உங்களது கோபம், வெறுப்பு, வன்மம் ஆகிய பலவீனங்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான வலிமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு பொறாமைக்காரரானால், உங்களது பொறாமை எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் உங்களது ஜம்புலன்களுக்கு அடிமைப்பட்டிருந்தால், உங்களது ஜம்புல ஆசைகளை அடக்கி தலைவராவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் குடிப்பழக்கத்திற்கோ, போதைமருந்துப் பழக்கத்திற்கோ அடிமையாகி இருந்தால், உங்களை அடிமைப்படுத்தியுள்ள உங்களது அபாயகரமான பழக்கத்தை வெற்றி கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு பேதையாக இருந்தால், இந்த தியான முறை உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பயன்படக்கூடிய அறிவை ஓரளவு வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கும்.

நீங்கள் உண்மையாக தியானப்பயிற்சி செய்தால், உங்களது மன எழுச்சிகள் உங்களை மேலும் முட்டாளாக்குவதற்கு எவ்வித வாய்ப்புமில்லை.

நீங்கள் ஒரு அறிவாளியானால், இந்த தியானம் அதிஉன்னதமான மெய்யொளிக்கு இட்டுச் செல்லும். அதன் பின் நீங்கள் பொருட்களை அவை உள்ளதை உள்ளவாறு காண்பீர்கள்.

இவைகள் தியானம் செய்வதால் வரும் நடைமுறை நன்மைகளுள் சில. இந்த நன்மைகள் எந்தக் கடையிலும், சிறப்பங்காடியிலும் விற்கப்படுவதில்லை. பணத்தால் இவற்றை வாங்க முடியாது. தியானப் பயிற்சி மேற்கொண்டாலே இவை உங்களுக்கு உரித்தாகும்.