தியானம் அவசியமா?
ஆம் தியானம் அவசியமே!

உலகில் மக்கள் அடிக்கடி துக்கத்தில்(துயரத்தில்) ஆழ்வதை அறிகின்றனர். அதற்காக எதையோ தேடி அலைகின்றனர். ஏன் இப்படி அலைகிறோம் என்பதையே அறியாமல் இருப்போர் பலர். வெளிச்சம் மறைந்ததும் இருள் தானாகவே வெளி வரும். அதாவது இருள் எப்போதும் இருக்கிறது. வெளிச்சம் வந்ததும் மறைகிறது. வெளிச்சம் மறைந்ததும் அவ்விடத்தில் இருள் தானாகவே வருவதைக் காண்கிறோம்.

இது இயற்கை. இது போலவே மகிழ்ச்சி வரும்போது துயரம் மறைகிறது. இந்த சொற்பகால மகிழ்வு மறைந்ததும் அங்கிருக்கும் துக்கம்(துயரம்) வந்தடைகின்றது. இந்த மகிழ்ச்சி தற்காலிகமானதே என்பதை அறிவுடையோர் அறிந்திருப்பதால் அக மகிழ்வதில்லை. என்றைக்கும் துக்கம் நிலையாய் இருப்பதை அறிந்திருப்பதால் இத் துக்கத்தை(துயரத்தை) நீக்கும் வழியைக்காண. அலைகின்றனர். ஆக மக்கள் தடி அலைவது துக்கத்திலிருந்து(துயரத்திலிருந்து) விடுபடும் வழியைக் காணவேதான். இதற்குதான் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.

அரச குமாரர் சித்தார்த்தர் துக்கத்தை போக்கும் வழியை காணவே துறவறம் பூண்டு பலவித துன்பங்களை ஏற்று காடு, மலை, வனம் ஆகிய இடங்களில் தான் கேள்வியுற்ற கடும் தவம் முதலிய வழிகளில் ஆறு வருடங்கள் ஈடுபட்டார். கடைசியாக தன் முயற்சியினாலேயே ஞானம் பெற்று சம்மா சம்புத்தர் ஆனார். அவர் தன் ஞானத்தினால் அறிந்த உண்மைகளை உலக மக்கட்குப் போதித்தார்.

அவர் உலக மக்கட்கு முதலில் அறிவித்தது நான்கு உன்னத உண்மைகள். அவை... Four Noble Truths. They are…

  • உலகில் துக்கம் நிறைந்துள்ளது என்ற உண்மை
  • துக்கம் உற்பத்தியாகும் காரணம் உண்டு என்ற உண்மை
  • துக்கத்தை அடியோடு போக்குதல் என்ற உண்மை
  • துக்கத்தைப் போக்கும் வழி என்ற உண்மை .

துக்கம் இருப்பதை அறியும்படி தெரிவித்துவிட்டு, அத்துக்கத்தை எப்படி போக்குவது? அதாவது துயரத்திலிருந்து எவ்வழியால் விடுப்பட்டு நிரந்தர மகிழ்வைக் காணலாம் என்னும் வழியையும் காண்பித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட உண்மை ஞானத்தை அதாவது "புத்த நிலையை" அரச குமாரனாகிய சித்தார்த்தர் அடைந்ததால் "புத்தர்" என அழைக்கப்படுகிறார். புத்தர் ஆகக்கூடிய உன்னத ஞானம் பெறக் காரணமான அந்த "தன் முயற்சி" எது? அதுதான் அவர் கண்டு பிடித்த விபசனா தியானம்(Insight Meditation). ஆம் அவர் புத்த நிலை அடைவதற்குக் காரணம் "தியானம்" தான் .

தியானம் உலக மக்களால் இப்போது அதிகமாக போற்றப்படுகிறது. பலதரபட்ட மக்கள் ஏற்றத்தாழ்வுகள் இன்றி, தேசம், மொழி, கடந்து தியானத்தில் பயிற்சி பெற முயல்கின்றனர்.

தியானம் என்பது இங்கும் அங்கும் கட்டுக்கடங்காமல் அலையும் மனத்தைக் கட்டு படுத்துவதே. அதாவது நாம் செய்யும் எல்லாவித(நல்லவை, தீயவை) காரியங்களும் நடைமுறையாவதற்குத் தூண்டுகோலாக இருப்பது மனமே. அப்படிப்பட்ட மனதை தூய்மைப் படுத்தி ஒருநிலையில் ஆழ்த்தி கட்டுக்குள் அடங்குவது தான் தியானம்.

எல்லாவித துயரம், மகிழ்வுக்குக் காரணமாகிய மனத்துள் இயற்கை(நிலை) குணத்தை அறிந்து, அதை தன் தின வாழ்க்கையில் நல்லவிதமாய் ஈடுபட செய்வதுதான் தியானம். பகவன் புத்தர் காட்டிய நெறிப்படி எவ்விதத்திலும் மாறுபடாமல் தீவிரமாய் தியானத்தில் ஈடுபடுவோர் சமாதி நிலையடைந்து நல்ல முடிவாகிய(பஞ்ஞா) விவேகத்தை(Wisdom) அடையமுடியும்.