தியானத்தின் வழிமுறைகள்:

பகவான் புத்தர் எல்லா மனிதர்களுக்கும் அன்பும், கருணையோடும், இல் வாழ்க்கை சிறப்புடன், திறம்பட செயல்பட எளிமையான முறையில் தியான முறைகளை அருளியுள்ளார்.

1. ஆனாபானசதி தியானம்

புத்த பகவன் அவரவர்களின் சுவாசத்தையே(மூச்சு) தியானப் பொருளாய் தேர்ந்தெடுத்து சிபாரிசு செய்திருக்கிறார். இத் தியானத்தை(AANAA PAANAA SATHI) ஆனா பானா சதி என பாலி பாஷையில் கூறுவர். இதன் பொருள் சுவாசம் உள் செல்லுதலையும், வெளிவருதலையும் மிக்க உன்னிப்பாய் கவனித்தல்.

சுவாசத்துடன் சென்றுவிடாமல் சுவாசம் உள்ளே போகும் விதத்தையும் வெளியில் வரும் விதத்தையும் மாத்திரம் கவனித்தல் வேண்டும். சுவாசத்தின் வேலை(சுபாவம்) உள்ளே போவதும் வெளியே வருதலும். ஆனால் தியானியின் வேலை அதன் நடத்தை எப்படி உள்ளதோ அவ்விதமே அதைக் கவனித்தல் மாத்திரம் தான், மிக்க உன்னிப்பாய் கவனித்தல்தான். இப்பயிற்சியில் நல்ல முன்னேற்றத்தை தியானியிடம் ஆசிரியர் கண்டு, தியானி சமாதி நிலைக்கு வந்திருப்பதை அறிந்தவுடன் தியானிக்கு விபசனா(Insight) தியானத்தைக் கற்பிப்பார்.

2. விபசனா தியானம்:

இத்தியானத்தின் மூலம் ஞானம் (பஞ்ஞா-Wisdom) அடைய வாய்ப்பு உண்டு. இத்தியான பயிற்சியாளர் தன் உடம்பில் ஒவ்வொரு பாகத்தையும் தலை உச்சியிலிருந்து கால் பாதங்களின் விரல்கள்வரை பகுதிகளாக ஆங்காங்கே உதிக்கும் பலவித உணர்ச்சிகளை, அவைகள் எப்படி உள்ளனவோ அப்படியே அவைகளை உன்னிப்பாய் கவனித்தல் வேண்டும். (Observing the things as they really are) ஏற்படும் உணர்ச்சிகள் இப்படி இருக்கும், அப்படி இருக்கும், அல்லது இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்கக் கூடாது.

விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆங்காங்கே ஏற்படும் உண்மை உணர்ச்சிகளை அவைகள் உள்ளவாறே உன்னிப்பாய்க் கவனித்தல் வேண்டும். பலவித உணர்ச்சிகள் ஆங்காங்கே உதிப்பதும் மறைவதும் ஆக இருப்பதை அறிந்து புரிந்து கொள்ளுதல் அவசியம். ஆக இதனால் உணர்ச்சிகள் உதிப்பதெல்லாம் மறைவதற்கே என்ற உண்மை புலப்படும். எல்லாம் நிலையற்றவை (அநிச்சியம்) என்ற உண்மையைத் தியானி அறிவார். இதன் காரணமாய் தியானி ஞானம் (பஞ்ஞா-Wisdom) என்ற உன்னத நிலையைப் பெறும் வாய்ப்பைப் பெறுகிறார்.

சதிபத்தானாவின் சுருக்கம்:

தியானி எல்லா நேரங்களிலும் மிக்க கவனமாய் இருக்க வேண்டும். நடக்கும் போதும், உட்காரும் போதும், ஓடும் போதும், சாப்பிடும் போதும், நீர் குடிக்கும் போதும், பேசும் போதும், மெளனமாய் இருக்கும் போதும், உடுக்கும் போதும் தியானி தன் நடத்தையை நன்றாய் உணர்வதுடன் அதை உன்னிப்புடன் கவனித்துக் கொண்டிருப்பார்.

விபசனா பயிற்சியில் ஒருவன் தன்னுள் இருக்கும் உண்மை நிலையைக் காண்கிறான். அதாவது உடல் அமைப்பு, மன அமைப்பு ஆகியவைகள் சேர்ந்த பொருளைத்தான் “நான்” “என்னை” “என்னுடையது” என கூறுகிறார். உடல் அமைப்பு, மன அமைப்பு இவைகளில் மிக அதிகமாக இணைந்து இருப்பதால் துன்பம் ஏற்படுகிறது. புத்தரின் வழியில் செல்ல விரும்பினால் உடல், மனம் இவைகளின் உண்மைகளைக் கவனிக்க வேண்டும். இவைகளின் அடிப்படையான குறைகளைத் தியானி நேரிடையாக அனுபவிக்க வேண்டும். இதன் பயன்தான் மெய்யறிவு(Wisdom).

மெய்யறிவை(Wisdom) மூன்று வகையாகப் பிரிக்கலாம் (1) கேட்பதனால் பெறும் மெய் அறிவு. (2) தன் ஆராய்ச்சியின் மூலம் பெறும் மெய் அறிவு. (3) தன் நேரிடையான அனுபவத்தால் பெறும் மெய்யறிவு. பல அறிவுரைகளைக் கேட்கலாம், பல ஏடுகளைப் படிக்கலாம், தன் அறிவின் மூலம் ஆராய்ந்திருக்கலாம், இதனால் அவர்கள் “ஆஹா, புத்தரின் போதனை அபூர்வமானவை, இந்த பேரறிவு மிக மிகப் போற்றத்தக்கது” என்பதை உணரலாம். ஆனால் இது நேரிடையான அனுபவத்தினால் பெற்ற மெய்யறிவு அல்ல.

உடல், மனம், ஆறு உயர்வுகள், அதன் அங்கங்கள் இவை யாவும் அநிச்சயம்(நிச்சயம் இல்லாமை) துக்கம்(துயரம்), அநாத்தா(ஆத்மா இல்லாமை) ஆகிய அடிப்படை குணங்களைப் பெற்றிருக்கின்றன. அவரவர்கட்குள்ளேயே இந்த உண்மையான நிலையை ஒவ்வொருவரும் நேரிடையாக அனுபவிக்கும்படி புத்தர் அறிவுறுத்துகிறார். இந்த உடம்பிலேயே இந்த உண்மையைக் காண இரண்டு வழிகள் காட்டப்பட்டுள்ளன. (1) உடல் அமைப்பு (2) மன அமைப்பு – இதில் உணர்வு, உணர்வின் அறிவு, உணர்ச்சியை உணரும் மனதில் ஒரு பாகம், பிரதிபலத்தை அறியும் மனதில் ஒரு பாகம் ஆகியவை அடங்கும். இந்த இரண்டு அமைப்புகளையும் ஆராய்ந்து அறிய புத்தர் காயானுபாசனா(உடம்பை உன்னிப்புடன் கவனித்தல் ) மற்றும் சித்தானுபாசனா(மனதை உன்னிப்புடன் கவனித்தல்) என்பவைகளைப் போதித்துள்ளார்.

உடம்பில் ஏதோ ஒன்று நேர்ந்திருந்து அதை உணர்தல், அதை அறிதல் காயானுபாசனாவாகும். ஏதாவது உணர்ச்சி ஏற்பட்டு அதை உணர்ந்து அறிதல் வேதனானுபாசனா(உடம்பில் ஏற்படும் உணர்ச்சியை உன்னிப்பாய் கவனித்தல்) இவ்விரண்டும் உடம்பைப் பற்றியதாகும்.

இது போன்று சித்தானுபாசனா மனதில் ஏதொன்றும் தோன்றாவிடில், அதை நேரிடையாக அனுபவிக்க முடியாது. மனதில் ஏதோவதொன்று தோன்றினால் அது “தம்மா” (மன பொருளடக்கத்தை உன்னிப்புடன் கவனித்தல்). இவ்வாறு காயானுபாசனாவும், வேதனானு பாசனாவும் உடம்பைப் பற்றியது. சித்தானுபாசனாவும், தம்மானுபாசனாவும் மனதைப் பற்றியது.

மனதும், உடம்பும் எப்படி ஒன்றுக்கொன்று சம்மந்தப்பட்டிருக்கிறது என்பதை அவரவர் சொந்த அனுபவத்தினாலேயே காணலாம். நேரிடையான அனுபவம் இல்லாமல் ஒருவர் மனதையும், உடம்பையும் அறிந்து கொண்டேன் என்றால் அது அறியாமையே. நேரிடையான அனுபவம் ஒன்று தான் உடம்பு, மனம் இவைகளின் உண்மையைக் கண்டறிய உதவும். இதன் மூலம் தான் விபசனா நமக்கு உதவ ஆரம்பிக்கும்.

விருப்பு,வெறுப்பு என்பது ஏதோ வெளிப்புற பொருளின் பிரதிபலிப்பு என பலருக்குத் தோன்றுகிறது. உண்மையில் அது அல்ல. நம்முடைய உணர்ச்சிகளின் பிரதிபலிப்புத்தான் விருப்பு வெறுப்பு என்பதைப் பகவன் புத்தர் தன் ஞான நிலையில் அறிந்து அவர் சொன்னதாவது:

ஆறு பலன்கள் அடிப்படையில் தொடர்பு ஏற்படுகிறது.

தொடர்பினால் உணர்ச்சி ஏற்படுகிறது. உணர்ச்சியினால் விருப்பம்(ஆசை) ஏற்படுகிறது. இதனால் ஆறு உணர்ச்சி புலன்களால் தொடர்பு ஏற்பட்டு, அதன் காரணமாய் உணர்ச்சி – மகிழ்வு – துக்கம் – ஏற்படுகிறது. இதன் காரணமாக விருப்பு வெறுப்பு ஏற்படுகிறது என்பது நன்றாய் புலனாகிறது அல்லவா. இவ்விதம் ஏற்படுவதற்கு முன்பு விருப்பு வெறுப்பு தோன்றுவதில்லை.

இது சம்பந்தமாய் புத்தர் மிக ஆழ்ந்து ஆராய்ந்து. தானே அதை அனுபவித்து உணர்ந்ததால் இந்த உண்மை தெளிவாயிற்று. அவர் இப்பிரச்சினையின் அடித்தளம்வரை ஆழ்ந்து ஆராய்ந்து துக்கத்தின் காரணத்தை(மூலத்தை) மறுபடியும் துளிர்க்காமல் அடிவேருடன் களைந்தெடுப்பது எவ்விதம் என்ற உண்மையைக் கண்டு பிடித்திருக்கிறார்.

 

பகவன் புத்தர் இந்நாட்டில் பிறந்து, வளர்ந்து, யாரும் அடைய முடியாத புனித ஞானம் அடைந்து அதன் அடிப்படையில் கருணை உள்ளத்துடன் உலகத்துக்குத் தம்மத்தைப் போதித்தருளினார். அதை அறிந்து இந்த நல்லதோர் வாய்ப்பைப் பயன்படுத்தி உலகோர் அவர் போதித்த தம்மத்தை அடித்தளம் வரை பயின்று பயிற்சி செய்து அனுபவித்து துன்பத்திலிருந்து விடுபட்டு நற்பலனைப் பெறுவார்களாக.

பிரம்ம விஹாரம் என்பதின் ஏமத்தா(அன்பு), கருணா(கருணை), முடித்தா(பிறரை மகிழ்வு பெற செய்து) அவர்களின் மகிழ்வில் மகிழ்தல், உபேக்கா(விருப்பு வெறுப்பு இல்லா சமநிலை) ஆகிய குணங்களைப் பெற்று மக்கள் என்றும் அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழ்வார்களாக.

ஆசிரியர்:

தியான பயிற்சியில் ஈடுபடுவோர் தியானத்தின் முக்கியத்தை அறிந்து, அதில் ஈடுபட தியானத்தை நன்றாய் அறிந்து பயிற்சி பெற்ற சிறந்த ஆசிரியரைப் பெறுதல் தலையாயக் கடமை. அப்படிப்பட்ட சிறந்த ஆசிரியரைக் கண்டு அவரிடம் சரணடைந்து, அவர் கற்பிக்கும் ஒவ்வொரு முறையையும் கடைப்பிடித்து, அதாவது அவர் சொல்லும் முறைகளில் ஏதொன்றையும் தள்ளாமலும், அதனுடன் ஏதும் கூட்டாமலும் அவர் சொல்கின்ற முறையில் ஏதும் சந்தேகம் இல்லாமலும் அப்படியே பயிற்சியில் ஈடுபடுவது மிகமிக முக்கியம்.

தியான முன்னேற்றத்தை அறிந்து, ஆசிரியர் அவ்வப்போது தியானத்தில் சிறப்பு பயிற்சிகளை நேரத்திற்கேற்றவாறு கற்பிப்பார். தியானிகள் மிக்க கவனத்துடன் இச்சிறந்த பயிற்சியினை அவ்வப்போது கடைபிடித்து பயிற்சியில் ஆழ்ந்து ஈடுபடுதல் வேண்டும்.

தியானத்தின்போது உன்னதமான மெளனத்தைக் கைகொள்ளல் அவசியம். அதே நேரம் படித்தலோ, எழுதுதலோ ஏதும் கூடாது. இத்தருணத்தில் மனதை வேறு எங்கும் எக்காரணம் கொண்டும் செலுத்துதல் கூடாது. அனைத்து நடவடிக்கைகளையும் மறந்துவிட வேண்டும். தான் பழக்கத்தில் வைத்திருந்த பிரார்தனை, ஜெபம் ஆகியவைகளை அறவே மறந்திருத்தல் வேண்டும்.